சேலம்-விருத்தாசலம் இடையே 15-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம்

சேலம்-விருத்தாசலம் இடையே 15-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம்.

Update: 2021-02-27 20:55 GMT
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம்- விருத்தாசலம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 15-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம். அதன்படி விருத்தாசலம்-சேலம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06121) ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருத்தாசலத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் சேலம்- விருத்தாசலம் (வண்டி எண் 06122) ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்,
மேலும் சேலம் வழியாக மங்களூர்-கோர்பா அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06003) நாளை (திங்கட்கிழமை) முதல் காலை 6.45 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு கோவை, ஈரோடு வழியாக மாலை 6.02 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 3-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோர்பா சென்றடையும்.
எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06004) வருகிற 2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம் வழியாக 4-ந் தேதி மாலை 5.50 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
ஈரோடு-பிலாஸ்பூர் (வண்டி என் 06006) சிறப்பு ரெயில் நாளை காலை 8.15 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பூர் ரெயில் நிலையங்கள் வழியாக மறுநாள் மதியம் 2.30 மணிக்கு பிலாஸ்பூர் சென்றடையும், இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்