கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம் பிடித்ததால் தந்தை, அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம் பிடித்ததால் தந்தை, அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம் பிடித்ததால் மனவேதனை அடைந்த தந்தை, அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செங்கல்சூளை தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள களங்காணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57). இவர் சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் தனது மூத்த மகன் சங்கருடன் (25) தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சுப்பிரமணியின் இளைய மகன் கிருஷ்ணன் (21) அடிக்கடி அந்த செங்கல் சூளைக்கு தந்தையை பார்க்க வருவாராம்.
அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேலத்தை சேர்ந்த பாஸ்கரின் மனைவி சத்யா என்பவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த பாஸ்கர் இதுகுறித்து சுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணனும், சத்யாவும் திடீரென தலைமறைவாகினர். இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாஸ்கர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நேற்று காலை செங்கல்சூளை அருகே உள்ள ஒரு மரத்தில் சுப்பிரமணி மற்றும் அவரது மூத்த மகன் சங்கர் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சோகம்
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தந்தை, மகன் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதலியுடன் இளைய மகன் ஓடி போனதால் அவமானம் அடைந்த தந்தை சுப்பிரமணி, மகன் சங்கருடன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் களங்காணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=========