சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
கொரோனா காலத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து மருத்துவ நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்காத தலைமை செவிலியரை கண்டித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தலைமை செவிலியரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. செவிலியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் சிறிது நேரம் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் பற்றாக்குறையால் வாரவிடுமுறையை கூட சுழற்சி முறையில் மாற்றி சிரமத்திற்கு இடையே பணிபுரிந்து வருவதாகவும், தலைமை செவிலியர் மீது ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.