மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Update: 2021-02-27 20:13 GMT
மதுரை
மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும், 10 சட்டசபை தொகுதிகளில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கலெக்டர் அன்பழகன் கூறினார்.
விதிமுறைகள்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணியினை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன் தொடக்கமாக அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் பேசிய கலெக்டர், தேர்தல் விதிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், போலீஸ் துணை கமிஷனர் சிவ பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைவரும் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படையினர், வீடியோ பதிவு செய்யும் குழுவினர், சோதனை சாவடி குழுவினர் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுவினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற சுழற்சி முறையில் இவர்கள் பணியாற்றுவார்கள். தேர்தல் விதிப்படி ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேற்பட்ட தொகைக்கு நிச்சயம் ஆவணம் இருக்க வேண்டும்.
தேர்தல் பார்வையாளர்கள்
கொரோனாவிற்காக ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,050 வாக்காளர்கள் தான் வாக்களிப்பார்கள். அதற்கு ஏற்றப்படி வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,856 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தினர் வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அந்தந்த தொகுதியில் கண்காணிப்பு பணியினை மேற்கொள்வார்கள். 
பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா போன்ற எந்த செயலிலும் ஈடுபட கூடாது. அனைத்து சுவரொட்டிகளையும் அழிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மாவட்டத்தில் முறையாக பின்பற்றப்படும். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் பிரசார அனுமதிகளுக்கு சுவிதா இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் மூலமாகவே அனுமதியும் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்