கொட்டாம்பட்டி
வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கீழே விழுந்தார்
மேலூர் அருகே உள்ள முத்திருலாண்டிபட்டியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 30). இவர் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கருங்காலக்குடியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மாடு குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கார்த்திக் படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக மீட்டு கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 33). இவர் திருப்பூரில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருப்பூரிலிருந்து கமுதிக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அந்த மோட்டார் சைக்கிளில் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் சாரதி பின்புறம் உட்கார்ந்து வந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளி பூங்கா அருகே வந்தபோது அந்த வழியாக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாயகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாரதி மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.