தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. உடனே குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் ஆதாரம்
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை விளங்குகிறது.
வடகிழக்கு பருவ மழை பெய்த போது 10 அடி உயரம் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்தால் அணை நிரம்பும் என பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. மேலும் மதகுகளில் இருந்து கசிவு காரணமாக தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருந்தது.
வீணாகும் குடிநீர்
ஆதலால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து தற்போது 6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. வெம்பக்கோட்டை அணையிலிருந்து சிவகாசி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
போதிய பராமரிப்பு இல்லாததால் வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் கவலை
வெம்பக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம், விளாமரத்துப்பட்டி, அக்கரைப்பட்டி, துலுக்கன்குறிச்சி, கங்கர்செவல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேைவயான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
ஆதலால் இந்த பகுதியில் உள்ள மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க கூடிய நிலை உள்ளது. இவ்வாறு இருக்கும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை நினைத்து பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.
நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.