நச்சலூர்
குளித்தலை வட்டார வேளாண்மை துறையின் சார்பாக சூரியனூர் கிராமத்தில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் பயறு வகைகள் பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இதற்கு குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். சூரியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். குளித்தலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் கணேசன், புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப விஞ்ஞானி திருமுருகன், பெட்டவாய்த்தலை கரும்பு ஆலையின் கரும்பு அதிகாரி ஷோபனா மற்றும் வெங்கடேஷ், குமாரமங்கலம் வேளாண் செம்மல் பட்டம் பெற்ற துரைசாமி ஆகியோர் பேசினர். மேலும் வேளாண் இடுபொருட்கள் சார்ந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், டிஏபி தெரிவிக்க முறைகள் பற்றியும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் உழவர் குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாமக்கல் வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி மூலம் உளுந்து சாகுபடி பற்றி சூரியனூர் விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வேளாண் உதவி அலுவலர் தனபால் நன்றி கூறினார்.