அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழாவில் இரண்டாவது நாளாக குதிரை சிலைக்கு மாலைகள் குவிந்தன

அய்யனார் கோவிலில் மாசிமகத் திருவிழாவில் இரண்டாவது நாளாகவும் குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் குவிந்தன.

Update: 2021-02-27 18:39 GMT
கீரமங்கலம்:
ஆயிரக்கணக்கான மாலைகள்
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில், ஆசியாவில் உயரமான 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் உள்ளது. கோவிலில் மாசிமகத் திருவிழா கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாக நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு பிரமாண்ட குதிரை சிலைக்கு கிராமத்தின் சார்பில் முதல் மாலையாக பூ மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் ஏற்றி வந்த காகிதப்பூ மாலைகளை காணிக்கையாக அணிவித்தனர். 
நேற்று முன்தினம் இரவில் ஆயிரம் மாலைகளுக்கு மேல் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு வரை சுமார் 2 ஆயிரம் காகிதப்பூ மாலைகள் குதிரை சிலைக்கு அணிவிக்கப் பட்டது. பக்தர்கள் கரும்பு தொட்டிகள் கட்டி, அதில் தங்கள் குழந்தைகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வழிபாடு
மாசிமகத் திருவிழாவிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பல இடங்களிலும் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. திருவிழாவில் பக்தர்களுடன் திருடர்கள் கலந்துவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே சுமார் 50 கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தி கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தீயணைப்பு படையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோர் முகாமிட்டிருந்தனர். ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே கைகளை கழுவிக்கொள்ள கிருமி நாசினி, சோப்புகளுடன் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. 
மேலும் தேர்தலில் சீட்டு கேட்டு காத்திருக்கும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. போன்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து வழிபாடுகள் செய்திருந்தனர். தொடர்ந்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்று ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.

மேலும் செய்திகள்