ரத்து செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு பேச்சுவார்த்தைக்குப்பின் நடந்தது

ரத்து செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு பேச்சுவார்த்தைக்குப்பின் நடந்தது

Update: 2021-02-27 18:16 GMT
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு 27-ந் தேதியான நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, திருமானூர் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு ஆணையை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். இதனால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அப்பகுதி மக்கள் நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும் என முறையிட்டனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு அதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிகாரிகள் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமானூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு பின் திருமானூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விடிந்தவுடன் காலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் மீண்டும் நேற்று காலை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. 
இதில் இறுதியாக அதிகாரிகள் சம்மதித்து மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கினர். மேலும் அதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்கக்கூடாது என்றும், மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எந்தவிதப் பரிசுப்பொருட்களும் வழங்கக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏற்றுக்கொண்டு நேற்று மதியம் 12 மணியளவில் ஜல்லிக்கட்டு ஆனது தொடங்கப்பட்டது. முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு இனிதே தொடங்கியது. வீரர்கள் கலத்தில் முன்பே உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்க தொடங்கினர். இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்தது விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது.
 சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்தன. ஜல்லிக்கட்டில்  மொத்தம் 200 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்