உத்தனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி
உத்தனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று முன்தினம் பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து ராகி, நெல், தக்காளி, பீன்ஸ், அவரை, கேரட், முட்டைகோஸ், தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட கோரி ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் வனத்துறை, போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானை விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.