கட்சி பாகுபாடின்றி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும்
கட்சி பாகுபாடின்றி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்துத்துறை அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. எந்தவொரு அரசு அதிகாரிகளும் அமைச்சரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியினரையோ தனிப்பட்ட முறையில் சந்திக்கக்கூடாது. அரசு கட்டிடங்கள் மற்றும் அதை சார்ந்த கட்டிடங்களில் இருக்கும் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகளை 24 மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்ற வேண்டும்.
சுவர் விளம்பரங்கள்
மேலும் பொது சொத்துக்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் கட்டிடங்களில் இருக்கும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை 3 நாட்களுக்குள்ளும் அகற்றிவிட்டு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களில் பிரதமர், முதல்-அமைச்சர் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் இருப்பின் அவற்றை உடனே அகற்ற வேண்டும். கவர்னர், ஜனாதிபதி, சுதந்திர போராட்ட தியாகிகள், தேச தலைவர்களின் படங்கள் இருக்கலாம். அதுபோல் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் இருந்தால் அவற்றை ஒரு துணியால் மூடி வைக்க வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வாகனங்களை திரும்ப பெற வேண்டும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை உடனடியாக பூட்டி சீல் வைத்து சாவியை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எந்தவித புதிய பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படக்கூடாது. ஏற்கனவே ஆரம்பித்து நடந்துள்ள பணிகளை தொடர்ந்து செய்யலாமே தவிர புதிய பணிகளுக்கு பூமி பூஜை போட்டு தொடங்கக்கூடாது. இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியும் நிறுத்தப்பட வேண்டும்.
நடுநிலையோடு பணியாற்ற...
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் வீடுகளிலும், கிராமப்புறங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக அகற்றப்பட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்புக்கு பாதகமாகவும் இருத்தல் கூடாது. நமது நடவடிக்கைகள் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையாகவும் இருக்க வேண்டும். ஆகவே அனைத்துத்துறை அலுவலர்களும் கட்சி பாகுபாடின்றி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.