உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தை மாணவிகள் முற்றுகை
மடிக்கணினி வழங்காததை கண்டித்து உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தை மாணவிகள் முற்றுகையிட்டனர்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நேற்று மாணவிகள் பள்ளிக்கு சென்று கேட்டபோது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பிரச்சினையை உடனடியாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.