திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி; திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம்
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் வள்ளி, முருகன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் ஐந்தாம் படை வீடான கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இம்மாதம் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான முருகன், வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சி மலைமேல் உள்ள திருக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை குருக்கள் சுதாகர் வேதமந்திரங்கள் முழங்க ஹோம பூஜைகளுடன் முருகப்பெருமான், வள்ளி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சாமி தரிசனம்
விழாவையொட்டி மூலவர் முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து தங்கவேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் சார்பில் கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையரும் செயல் அலுவலருமான பழனி குமார் ஆகியோர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘முருகனுக்கு அரோகரா’ ‘கந்தனுக்கு அரோகரா’ என்ற கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.