நன்னிலத்தில், குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை எரித்துக்கொல்ல முயற்சி தந்தை கைது
நன்னிலத்தில், குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:-
நன்னிலத்தில், குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
4 வயது சிறுவனுக்கு தீ வைப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராம்கி(வயது29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காயத்திரி(23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்கி மற்றும் அவருடைய மனைவி காயத்திரி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராம்கி, தனது மூத்த மகன் சாய்சரன் (4) மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாய்சரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை
பின்னர் சாய்சரன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காயத்திரி நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை அவனுடைய தந்தையே தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.