திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருமுருகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

Update: 2021-02-27 16:44 GMT
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி -திருமுருகநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமுருகநாதசுவாமி கோவில்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது.  இந்த ஆண்டு திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை திருமுருகநாதர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி  நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முதலில் சிறிய விநாயகர் மற்றும் சண்டீஸ்வரர் தேர்கள் புறப்பட்டது. பின்னர் சோமஸ்கந்தர், சண்முகநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள் உள்ளிட்ட 3 தேர்களை பக்தர்கள்  வடம் பிடித்து இழுத்தனர். 

சாமி தரிசனம்

இந்த தேர்கள் போலீஸ் நிலையம், அண்ணா வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக தேரோடும் பாதையில் சென்று மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறிதுநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பெண்கள் பல்வேறு குழுவாக சீருடை அணிந்தபடி பாடல் பாடியும், கோலாட்டம் ஆடியபடியும் தேருக்கு முன்பாக சென்றனர்.  இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
----
தேரோட்டத்தையொட்டி பெண்கள் இசைக்கருவிகளை இசைத்தபடி சென்றதை படத்தில் காணலாம்.
---------

மேலும் செய்திகள்