‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்’ - மோகன் குமாரமங்கலம் பேட்டி
‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்’ என்று காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.
நெல்லை:
காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் இன்றைய (நேற்று) கூட்டத்தில் ஏராளமான அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போதிலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இப்போது தேர்தலுக்காக தான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நம்ப மாட்டார்கள்.
இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர் நித்ய பிரியா ரவி, பாளையங்கோட்டை வட்டார தலைவர் டியூக் துரைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.