ஆலை அதிபர், மேற்பார்வையாளர் கைது

ஆலை அதிபர், மேற்பார்வையாளர் கைது

Update: 2021-02-26 21:02 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை அதிபர் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர். 
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காளையார்குறிச்சியில், திருத்தங்கலை சேர்ந்த தங்கராஜ் (வயது 58) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம்  விபத்து ஏற்பட்டது. 
இதில் 15-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திலேயே செல்வி (35), லட்சுமியம்மாள் (50), ஜோதி (55), சந்திரா (48) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 20 பேரை அப்பகுதியினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலைமை டாக்டர் அய்யனார் தலைமையில் மருத்துவக்குழுவினர் 20 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர்.
5 ஆக உயர்வு
இந்தநிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளையார் குறிச்சியை சேர்ந்த பொன்னுச்சாமி (75) என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்த போது இறந்த 4 பெண்களின் உடல் நேற்று முன்தினம் இரவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து அடையாளம் காணப்பட்டது. பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 5 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிவாரணம்
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த ஆலை அதிபர் தங்கராஜ் மற்றும் ஆலையின் மேற்பார்வையாளர் பாண்டி ஆகியோர் இரவு எம்.புதுப்பட்டி போலீசில் சரண் அடைந்தனர். 
பின்னர் அவர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பத்துக்கும் ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் மற்றும் ஈமகிரிய செலவுக்காக ரூ.50 ஆயிரம் தனித்தனியாக வழங்கப்பட்டது. பின்னர் போலீசார் ஆலை அதிபர் தங்கராஜ், மேற்பார்வையாளர் பாண்டி (48) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்