வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழா

காரைக்குடியில் வீரமாகாளியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது.

Update: 2021-02-26 20:27 GMT
காரைக்குடி,

காரைக்குடி பர்மாகாலனி பஸ் நிலையம் அருகே வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
9-வது திருநாளான நேற்று முன்தினம் இரவு கோவில் அருகே உள்ள திடலில் அரிவாள் ஏணியில் சாமியார் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்த திடலில் உயரமான இரு கம்புகளில் 11 அரிவாள் கொண்டு இணைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அரிவாள் ஏணியில் சாமியார் ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். பின்னர் இரு கம்புகளின் உயரத்தில் இரு வாளியில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது தூவினார். அந்த பூவை பக்தர்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர். நேற்று 10-வது நாள் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், அக்னி சட்டி, பறவை காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவையொட்டி காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்