திம்பம் மலைப்பாதையில் தொடரும் சம்பவம்: நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. குறுகிய 27 கொண்டை ஊசி வளைவை கொண்டதால், இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்ப முடியாமல் அடிக்கடி கவிழ்ந்து விடுவதும், பழுதாகி நிற்பதும் நடந்து வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
லாரி கவிழ்ந்தது
தாளவாடியில் இருந்து கோவைக்கு லாரி ஒன்று காய்கறிகள், பழங்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டு சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நள்ளிரவு 1 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதனால் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த காய்கறிகள், பழங்கள் ரோட்டில் கொட்டியது. இதன் காரணமாக அந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அதிகாலை 4 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னர் காய்கறிகள், பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.