குளித்தலை
திருப்பூரில் இருந்து கரூர், குளித்தலை வழியாக திருச்சி நோக்கி ஒரு தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. குளித்தலை பஸ்நிலையம் எதிரே உள்ள திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்நிறுத்தம் இடத்தில் நேற்று காலை 9 மணிக்கு அந்த பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் கண்டெக்டர் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கரூர் - திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் மற்றொரு தனியார் பஸ்சின் கண்டெக்டர், டிரைவர்கள் அந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளனர். காலை நேரத்தில் குறிப்பிட்ட பெயர் கொண்ட அந்த பஸ் இயக்கும் நேரம் இல்லை என்பதை அறிந்து, அந்த தனியார் பஸ்சின் டிரைவர், கண்டெக்டர்களிடம் கேட்டுள்ளனராம். மேலும் வழித்தட அனுமதியில்லாமல் ஒரு தனியார் பஸ் திருப்பூரில் இருந்து குளித்தலை வழியே உள்ள ஊர்களின் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகள் குளித்தலை பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்துவந்த பயணிகளுக்கு மீதி பயணக்கட்டணம் திரும்பதரப்பட்டு அந்த பஸ்சில் இருந்து அவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பஸ் குளித்தலை பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டது. குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.