75 சதவீதம் பஸ்கள் இயக்கப்படவில்லை
திருவாரூர் மாவட்டத்தில் 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் தொடங்கினர். வேலை நிறுத்தத்தின் முதல் நாளில் பஸ்கள் போதிய அளவு இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
55 பஸ்கள்
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 பணிமனைகளில் இருந்து சுமார் 212 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. வேலை நிறுத்த போராட்டத்தினால் நன்னிலம் பணிமனையில் 15 பஸ்கள், மன்னார்குடி பணிமனையில் 15 பஸ்கள், திருத்துறைப்பூண்டி பணிமனையில் 13 பஸ்கள், திருவாரூர் பணிமனையில் 12 பஸ்கள் என 55 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
வெறிச்சோடின
வேலை நிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையிலே நிறுத்தப்பட்டது.
இதனால் திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் வசதி இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் பல்வறு இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
இதைப்போல மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் பகுதி பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.