ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை, கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
ஆறுமுகநேரி, பிப்:
காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை, கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்
காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளிவாசல் அருகே ரூ.75 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நேற்று காலை சுமார் 10 மணியளவில் கோமான் தெரு பள்ளிவாசல் அருகே நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பள்ளிவாசல் ஜமாத் தலைவர் கோஸ் முகமது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் துணை தலைவர் துரை ஹாஜியார், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் முத்து முகமது வரவேற்று பேசினார்.
கனிமொழி எம்.பி.
விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், சாகுல் அமீது, மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜில்லா, ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், காயல்பட்டினம் நகர துணை செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய நலக்கூடம்
ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி பகுதியான குமார பனையூரில் புதிதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது) 2018-19-ம் ஆண்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பகுதியில் பகுதி மக்களின் நலனிற்காக சமுதாய நலக்கூடம் கட்ட கனிமொழி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சேர்ந்தபூமங்கலம் பஞ்சாயத்து தலைவர் சந்திரா மாணிக்கவாசகம், குமார பனையூர் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர் கமிட்டி செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.