பெருவயல் ரணபலி முருகன் கோவில் மாசி மக தேரோட்டம்
ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் மாசிமக திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் மாசிமக திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் மாசி மகத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் ரணபலி முருகன், வள்ளி-தெய் வானையுடன் அன்ன வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், மயில் வாகனம், புஷ்ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படியில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
விழாவில் பச்சை சாத்துதல் சிவப்பு சாத்துதல் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி இரவு விடிய விடிய நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வேல், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி வீதிகளை வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தையொட்டி கலைவளர் மணிலோக சுப்பிரமணியன் தலைமையில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மரக்காலாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தீர்த்தவாரி
இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் ராணி ராஜேசுவரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, ஆலய கண்காணிப்பாளர் சுரேஷ் மனோகர குருக்கள், ரமேஷ் குருக்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.