தூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-02-26 17:19 GMT
தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடையடைப்பு

மருத்துவ சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதி வன்கொடுமை, பாலியல் தொல்லை, தீண்டாமை ஆகியவற்றில் இருந்து சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் பலருக்கு வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

ஆர்ப்பாட்டம்

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சண்முகசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கோயில்மணி, மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வம், மாவட்ட அமைப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி ராஜசேகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்