விழுப்புரம் மண்டலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்- பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மண்டலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 16:51 GMT
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பஸ்கள் ஒடவில்லை. இதனால் விழுப்புரத்தில் பள்ளி மாணவிகள் ஆட
விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இருப்பினும் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்றும் 2-வது நாளாக இவர்களின் போராட்டம் நீடித்தது.

விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்றும் 2-வது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த எண்ணிக்கையில் ஓடிய பஸ்கள்

இதன் காரணமாக அரசு பஸ்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரத்தில் தனியார் பஸ்கள் வழக்கத்திற்கும் மாறாக அதிகளவில் இயக்கப்பட்டதால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் விழுப்புரம் 1, 2, 3-வது பணிமனைகள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கினார்.

 இதில் சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் மூர்த்தி, நிர்வாக பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி கணேசன், தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து மத்திய சங்க, கிளைகள் சங்க நிர்வாகிகள்,
 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி 1, 2-வது பணிமனைகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்