விழுப்புரத்திற்கு 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை- பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
விழுப்புரத்திற்கு 28-ந்தேதி வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமை தாங்குகிறார். மேலிட பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில பொதுச்செயலாளர் ராகவன், துணைத்தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட தலைவர் கலிவரதன் வரவேற்புரையாற்றுகிறார்.
அமித்ஷா கலந்துகொள்கிறார்
கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு மக்களிடத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை காலை காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1.30 மணியளவில் விழுப்புரம் வருகிறார்.
இதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் வந்திறங்கும் அமித்ஷா, அங்கிருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் தனியார் கல்லூரிக்கு சென்று அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தையொட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பா.ஜ.க.வினர், கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
விழுப்புரத்திற்கு அமித்ஷா வருகையையொட்டி டி.ஐ.ஜி. பாண்டியன், மாநில பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசாரும், டெல்லி பாதுகாப்பு படையினரும், கியூ பிரிவு போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.