ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தவர்: தலையில் கல்லைப்போட்டு கட்டிடத்தொழிலாளி கொலை - வாலிபர் கைது
ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த வழக்கில் தலையில் கல்லைப்போட்டு கட்டிடத்தொழிலாளி கொலை செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் புதிய கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கடந்த 18-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் முக்தா மாவட்டம் சப்பல்பூர் கிராமத்தை சேர்ந்த சவரவ் மண்டல் (வயது 19) என்ற கட்டிடத்தொழிலாளி தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த துரைபாக்கம் போலீசார், சவுரவ் மண்டல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின்பேரில் துரைப்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இது தொடர்பாக அதே இடத்தில் கட்டுமான வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் தேவனாம்பூர் கிராமத்தை சேர்ந்த சுஜித் சர்க்கார் (21) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில் சுஜித் சர்க்காருக்கும், சவரவ் மண்டலுக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சுஜித் சர்க்கார், சவுரவ் மண்டலின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேக மரணம் பிரிவில் பதிவான வழக்கை கொலை வழக்காக துரைப்பாக்கம் போலீசார் மாற்றினார்கள். இது தொடர்பாக சுஜித் சர்க்காரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.