கல்லக்குடி அருகே முதுவத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
கல்லக்குடி அருகே முதுவத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.
கல்லக்குடி அருகே முதுவத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு:
காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
கல்லக்குடி,
கல்லக்குடி அருகே முதுவத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் ஆண்டு தோறும் அய்யனார் ஆண்டி கருப்பு கோவில் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 3 நாட்களாக திருவிழா நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
முன்னதாக அய்யனார் ஆண்டி கருப்பு கோவிலில் சாமி கும்பிட்டு கோவில் மாடுகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக் கட்டை லால்குடி தாசில்தார் சித்ரா, தனிவட்டாட்சியர் ஜெசிலின்னாசுகந்தி, ஊராட்சி தலைவர் தெய்வகண்ணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
18 பேர் காயம்
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 183 மாடுபிடி வீரர்களும், 464 காளைகளும் கலந்து கொண்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 3 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. 169 வீரர்களும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க களத்தில் இறக்கப்பட்டனர். இந்த ஜல்லிகட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 18 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசுகள்
ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை பிடித்த அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்கி முதல் பரிசையும், புள்ளம்பாடியை சேர்ந்த இருவர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஜல்லிக்காட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சண்முகம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் செய்திருந்தனர். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.