டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அச்சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மதியழகன், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ்மாக் தொ.மு.ச.வின் அரியலூர் மாவட்ட செயலாளர் கொளஞ்சி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். 18 ஆண்டுகளாக தற்காலிமாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் செய்ய வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பணி வரன் முறை செய்திட வேண்டும். பணியிட பாதுகாப்பு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் டாஸ்மாக் தொ.மு.ச.வின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.