தஞ்சை மாவட்டத்தில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயங்கின

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயங்கின. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-02-25 20:47 GMT
தஞ்சாவூர்:
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயங்கின. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வேலை நிறுத்தம் 
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரசு பஸ்கள் நேற்று குறைந்த அளவில் இயங்கின. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் அவர்களை கொண்டு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தஞ்சை புறநகர், நகர் கிளை-1, நகர் கிளை -2, கும்பகோணம் புறநகர், நகர் கிளை-1, நகர் கிளை-2, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு, தஞ்சை விரைவு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் விரைவு போக்குவரத்துக்கழகம் என 12 இடங்களில் பணிமனைகள் இயங்கி வருகின்றன.
குறைந்த அளவில் இயங்கின 
இவற்றில் மொத்தம் 461 பஸ்கள் உள்ளன. இதில் காலை நேரத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயங்கின. மதியத்துக்குப்பிறகு சற்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மதியம் வரை 209 பஸ்கள் இயக்கப்பட்டன. இது 45 சதவீதம் ஆகும். தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர் கிளை 1, நகர் கிளை 2 ஆகியவற்றில் இருந்து 110 பஸ்களுக்கு காலை நேரத்தில் 20 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. 
கரந்தை புறநகர் கிளையில் 41 பஸ்களுக்கு 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின.
இதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த போராட்டத்தினால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வதற்காக வந்தவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்காக வந்த மாணவ, மாணவிகள், கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தனியார் பஸ்கள் 
தஞ்சை தற்காலிக பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் பரபரப்பாக காணப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பஸ் நிலையங்களில் பஸ்கள் குறைவாக காணப்பட்டது. தனியார் பஸ்கள், மினி பஸ்கள் மட்டும் முழு வீச்சில் இயக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,263 போக்குவரத்துக்கழக ஊழியர்களில் நேற்று 522 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் ரெயில்கள் இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்