நாமக்கல் மாவட்டத்தில், வருகிற 1-ந் தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2021-02-25 19:06 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் தெரிவித்தார்.
இணை செயலாளர் ஆய்வு
நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா தடுப்பூசி போடும் மையம் மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்களா? என மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.
மூத்தகுடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பின்னர் சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணி போல் மற்ற பணிகளும் எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு மேற்கொண்டேன். மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தேன். இந்த ஆண்டு கல்லூரி திறக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறதா? என பார்வையிட்டு சுகாதாரத்துறை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்.
இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்