அ.தி.மு.க. மாநில மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. மாநில மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி 6 அமைச்சர்கள் முன்னிலையில் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

Update: 2021-02-25 17:04 GMT
விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம்(மார்ச்) நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையுடன் நடைபெற்றது. 
விழாவிற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலையில் பந்தக்கால் நடப்பட்டு, பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.  விழாவில் ஜெ நியூஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, முத்தமிழ்செல்வன், சக்கரபாணி, பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், சேகரன், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், கண்ணன், ராமதாஸ், நகர செயலாளர்கள் பூர்ணராவ், பாஸ்கரன், தீனதயாளன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

1½ லட்சம் பேர் அமரும் வகையில்... 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருச்சியில் அ.தி.மு.க. மாநில மாநாட்டை நடத்தினார். அதன்பிறகு தற்போது அடுத்த மாதம் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற உள்ள இந்த மாநாட்டில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் 1½ லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்