திண்டுக்கல் மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் ஓடின

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 40 சதவீத அரசு பஸ்கள் ஓடின. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியபடி பயணிகள் பயணம் செய்தனர்.

Update: 2021-02-25 16:09 GMT
திண்டுக்கல்:

வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

அரசு போக்குவரத்து கழகத்துக்கு உரிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முதல் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனாலும் குறிப்பிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

40 சதவீத பஸ்கள் ஓடின
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், வத்தலக்குண்டு உள்பட 8 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் மூலம் இயக்கப்பட்டு வந்த 420 அரசு பஸ்களில் நேற்று 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 

60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனிடையே தனியார் பஸ்கள் நேற்று வழக்கத்தைவிட கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. ஆனாலும் பயணிகள் தனியார் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கியபடி பொதுமக்கள் பயணம் செய்தனர். 

சில பஸ்களில் பயணிகள் படிக்கட்டுகளில் முண்டியடித்தபடி நின்று பயணம் செய்ததை காண முடிந்தது. அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை, பழனி, தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டது. 

இதனால் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனர். மேலும் தொழிலாளர்களின் போராட்டத்தால் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பணிமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தேவைக்கேற்ப இயக்கப்படும்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்களை வேலைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒருவேளை அவர்கள் வரவில்லை என்றால் பஸ்களை இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். மேலும் மாவட்ட பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்