பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கூடலூர் அருகே ஆரோட்டுப்பாறையில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூர் அருகே ஆரோட்டுப்பாறையில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பகவதி அம்மன் கோவில்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை 4-ம் நெம்பர் வயல் பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அனுக்ஞை புண்ணியாவாசனம், மகா கணபதி, லட்சுமி ஹோமங்கள் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வெற்றி விநாயகர் ஆலய ஆற்றங்கரையில் இருந்து மேள-தாளங்கள் முழங்க புனிதநீர் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல் மற்றும் 2-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
பின்னர் கலச பூஜை, 3-ம் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை சுற்றி வலம் வரப்பட்டது.
பின்னர் கணபதி, பகவதி அம்மன், முருகன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களின் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.