டாஸ்மாக் அலுவலகத்தில் தீ விபத்து
அம்பத்தூர் தொழிற்பேட்டை டாஸ்மாக் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழ்நாடு அரசு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. இங்கிருந்து வடசென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை இங்குள்ள அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியது. இதுபற்றி டாஸ்மாக் குடோன் பாதுகாவலர் அளித்த தகவலின்பேரில் அம்பத்தூர் தொழிற் பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த 10 கம்ப்யூட்டர்கள் உள்பட மதுபான விற்பனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.