நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது லாரி மோதி விபத்து

நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-02-24 19:35 GMT
வையம்பட்டி, 

மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
நின்ற பஸ் மீது லாரி மோதி விபத்து

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள சிங்கம்பட்டியில் இருந்து  அரசு டவுன் பஸ் ஒன்று மணப்பாறை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரட்டுப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை டிரைவர் இறக்கி விட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த லாரி திடீரென பஸ்சின் பின்பகுதியில்  மோதியது. இதனால் பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் சென்று மின்கம்பம் அருகே நின்றது.

20 பேர் காயம்

இதில் பஸ் டிரைவர் ஜான் ஆரோக்கியராஜ், பஸ்சில் பயணம் செய்த சின்னப்பொன்னு, ஜானகி, முத்துலட்சுமி, ஜீவானந்தம், சுந்தர்ராஜ், கணேசன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் சுமார் 6 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரியின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சாலையில் சிதறிக்கிடந்தன. மேலும் விபத்தினால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த கண்ணாடி உள்ளிட்டவைகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்