தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்: கோவையில் அனைத்து அரசு பஸ்களையும் இயக்க தேவையான நடவடிக்கை

தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் அனைத்து அரசு பஸ்களையும் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-02-24 18:32 GMT
கோவை,

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக்கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை (வியாழக்கிழமை) மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை கோட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தயாராகி உள்ளன.

இதனால் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளடங்கிய கோவை கோட்டத்தில் நாளை பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்து உள்ளன. இதுகுறித்து எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த கடந்த 2019-ம் ஆண்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்த போதிலும் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

எனவே புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்தக்கோரியும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாளை நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள். 

பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாது. இதேபோல் கோவை மண்டலத்தில் கொரோனா அச்சம் காரணமாக 900 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 700 பஸ்கள் வரை இயக்கப்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து பேசி வருகிறோம். கோவை கோட்டத்தில் 100 சதவீதம் அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. 

இதுதொடர்பாக அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களை சந்தித்து பேசி உள்ளோம். மேலும் அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளோம். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்