காங்கிரசின் வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சொல்கிறார்
குஜராத் மாநகராட்சி தேர்தல் தோல்வி, காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தேர்தல் நடந்த 6 மாநகராட்சிகளையும் ஆளும் பா.ஜனதா கைப்பற்றி வெற்றி வாகை கூடியது. இந்த மாநகராட்சிகளின் 576 வார்டுகளில் 483 இடங்களை பா.ஜனதா கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. வெறும் 55 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
அதிலும் முக்கிய மாநகராட்சியான சூரத்தில் ஒரு இடத்தை கூட காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. இங்கு வியப்பளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது.
இந்த நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சூரத் போன்ற முக்கிய மாநகராட்சியில் மக்கள் ஆம் ஆத்மியை எதிர்க்கட்சியாக தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இதுகுறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நாம் அனைவரும் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.
சூரத்தில் ஆம் ஆத்மியின் வெற்றியை நான் வரவேற்கிறேன். ஆனால் காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சியை மக்கள் நிராகரித்தது எதனால்? குஜராத் அல்லது பிற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி இதுபோன்று தோல்வியை தழுவுவது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை.
புதுச்சேரியில் பா.ஜனதா பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இதேபோன்ற தந்திரங்கள் மத்திய பிரதேசத்திலும் பிரயோகிக்கப்பட்டு காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மராட்டியத்திலும் இதுபோன்ற தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் மராட்டியத்திற்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இங்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு மகா விகாஸ் அகாடி கூட்டணியின் இரு அங்கத்தினர்களுடன் உறுதியாக நிற்கிறது.
புதுச்சேரியில் நடந்த சம்பவத்தில் இருந்து அனைத்து கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். டெல்லியில் அமர்ந்திருப்பவர்கள் அதிகாரத்தையும், பணத்தையும் தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுவது நாட்டின் நலனுக்கு நல்லது இல்லை. எதிர்க்கட்சி இல்லாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் எஞ்சி இருக்காது. ஜனநாயகம் இல்லை என்றால் இந்த நாடும் இருக்காது.
இந்த நாடும் இல்லை என்றால் ஒரு தேசிய கிழக்கிந்திய கம்பெனி தான் நாட்டை நடத்தும்.
புதுச்சேரியில் நடந்தது மராட்டியத்திலும் நடக்கும் என சிலபேர் கனவு காண்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து கனவு கண்டுகொண்டே இருக்கட்டும். மராட்டியத்தின் மனம் உறுதியானதாகவும், நோக்கம் வலுவானதாகவும் உள்ளது. புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசத்தில் விளையாடிய விளையாட்டு மராட்டிய மண்ணில் எடுபடாது. ஒரு காலத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தது. இப்போது புதுச்சேரி போன்ற ஒரு சிறிய யூனியன் பிரதேசம் கூட அதன் கட்டுப்பாட்டில் இல்லை.
இத்தகைய சூழ்நிலை ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொள்கைகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதிகாரத்திற்கு பின்னால் ஓடும் அரசியல் கவலையை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.