விக்கிரவாண்டி அருகே- அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்; 30 பேர் படுகாயம்
விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
விக்கிரவாண்டி.
கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். பஸ்சை மயிலாடுதுறை மன்ன வானந்தல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜநாயகம் (41) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சீர்காழியை சேர்ந்த முருகன் (38) என்பவர் இருந்தார்.
நேருக்குநேர் மோதல்
நள்ளிரவு 12 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகே வந்து கொண்டிருந்ததது. அப்போது எதிரே சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு விரைவுபேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 பேர் காயம்
இதை பார்த்த அங்கிருந்தவர்கள், ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் டோல்கேட் சாலை மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்த விரைவு பஸ் டிரைவர் ராமு மற்றும் அரசு பஸ்சின் டிரைவர் ராஜநாயகம், முருகன். இரு பஸ்சிலும் பயணம் செய்த பயணிகளான விஜய புரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (40), சென்னை எம்.ஜி.ஆர். நகர் சந்திரா (50), விருத்தாசலம் செல்வகுமார் (41), தஞ்சாவூர் இயலரசன் (39), சென்னை கே.கே. நகர் கலியமூர்த்தி (68), சென்னையை சேர்ந்த ரஞ்சித் (43), திருவாரூர் பிரியா (23), திருவான புதூர் கமலக்கண்ணன் (23), குரோம்பேட்டை ராஜேஸ்வரி( 34 ) உள்ளிட்ட 30 பேரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே விபத்து காரணமாக, விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து டிரைவர் ராஜநாயகம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.