கூடலூர்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்காத சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை.
ஆனால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக சத்துணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
அதன்படி கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சாலமன் தலைமையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பணியிடை நீக்கம்
அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிடாமல் வகுப்பறையில் அமர்ந்து இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, பள்ளியில் சத்துணவு சமைத்து வழங்காதது உறுதி செய்யப்பட்டது.
உடனே ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் ஆசை தேன்மொழியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது சத்துணவுக்கு பதிலாக மாணவர்களுக்கு அரிசி, முட்டை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்காமல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சத்துணவு அமைப்பாளர் ஆசை தேன்மொழியை பணியிடை நீக்கம் செய்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். மேலும் புதிய சத்துணவு அமைப்பாளர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு உள்ளார்.