நாகை மாவட்ட நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 19-ந் தேதி கடைசி நாள்

நாகை மாவட்ட நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 19-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-24 14:46 GMT
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்ட நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 19-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருகிற 1.4.2021 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி நாள்
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்கள், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி கடைசி நாளாகும். 
மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04365 253059, 7401703497 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்