பள்ளிகளில் தலா 2 பேர் தூதர்களாக நியமனம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க பள்ளிகளில் தலா 2 பேர் தூதர்களாக நியமனமிக்கப்பட்டு உள்ளனர் என்று ஊட்டியில் நடந்த விழாவில் கலெக்டர் பேசினார்.

Update: 2021-02-24 14:44 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தயக்கமின்றி புகார் செய்ய ஏதுவாக செஹலி (தோழி) என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார். 

தொடர்ந்து கலெக்டர் கையெழுத்திட்ட உன் வாழ்க்கை உன் கையில் என்ற விழிப்புணர்வு கடிதம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

இலவச தொலைபேசி எண்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பிறகு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்ய ஏதுவாக விரைவில் இலவச தொலைபேசி அறிவிக்கப்படும்.

அதுவரை சைல்டுலைன் எண் சேவையில் இருக்கும். தேயிலை தோட்டங்கள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிலாளர் நல அலுவலகம் மூலம் கண்டறிகின்றனர். 

அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்தி உள்பட அவர்களது மொழியிலேயே தெரிவிக்கலாம். பெண் குழந்தைகளை பாதுகாப்பது ஆண் குழந்தைகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். 

தூதர்கள் 
நீலகிரியில் ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 குழந்தைகள் பள்ளி தூதர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 

பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால், தூதர்கள் மூலம் தெரிவிக்கலாம். 
நீலகிரியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் சராயு, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்