பிரதமர் மோடி நாளை கோவை வருகை

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) கோவை வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2021-02-24 01:11 GMT
கோவை,

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) கோவை வருகிறார். அன்று காலை 7.45 மணிக்கு அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். 

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.10 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலையம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி பிற்பகல் 3.35 மணியளவில் கோவை விமானநிலையத்துக்கு வருகிறார்.  அங்கிருந்து குண்டு துளைக்காத பிரத்யேக கார் மூலம் கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறார். 

மேலும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதையடுத்து அவர் பா.ஜனதா சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.

பிரதமரின் கோவை வருகையையொட்டி கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

17 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 38 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 48 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். 

தற்போது கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள், சாலையோரம் தடுப்பு கட்டைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மேலும் அங்கு பல்வேறு இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்காக தனியாக மினி கண்ட்ரோல் அறை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர மாநகராட்சி சார்பிலும் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 

பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அடையாள அட்டை இன்றி வரும் யாரையும் பொதுக் கூட்ட மேடை அருகே போலீசார் அனுமதிப்பதில்லை. 

அங்கு பணியாற் றுபவர்கள், பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் போலீசார் மூலம் தனி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் அவரின் உருவப்படம் பொறித்த ராட்சத பலூன் கோவை ஹோப்காலேஜ் பகுதியில் பறக்கவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்