வையம்பட்டி அருகே ஆவாரம்பட்டியில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

வையம்பட்டி அருகே ஆவாரம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-02-21 20:33 GMT
வையம்பட்டி, 
வையம்பட்டி அருகே ஆவாரம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள ஆவாரம்பட்டியில் புனித அந்தோணியார் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டை மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ் தொடங்கி வைத்தார். முதலில் ஊர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

பரிசுகள்

இதில் பெரும்பாலான காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை முட்டித்தூக்கி வீசியும், எட்டி உதைத்தும் பிடிபடாமல் சென்றன. அப்படி இருந்தும், ஆக்ரோஷமாக வந்த காளைகளை சில வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச்சென்றனர். 

இந்த போட்டியில் 801 காளைகளும், 181 வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

69 வீரர்கள் தகுதிநீக்கம்

மாடுபிடி வீரர்கள் களத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். மது அருந்தி இருக்க கூடாது. என்று ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை 69 வீரர்கள் பின்பற்றாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டு வரலாற்றில் ஒரே நேரத்தில் 69 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கிணற்றில் விழுந்த காளை

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தின் அருகே ஜல்லிக்கட்டு காளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. உடனே அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின்னர் காளையை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்