பட்டா, சிட்டா இன்றி கூட்டுறவு வங்கியில் பெற்ற நகைக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி மனு
பட்டா, சிட்டா இன்றி கூட்டுறவு வங்கியில் பெற்ற நகைக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி பெண்கள் மனு அளித்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் பெண்கள், கூட்டுறவு வங்கி அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் அனைவரும் நிலமின்றி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன் மற்றும் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு நகை அடகு வைத்து பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலமின்றி ஏழ்மையான நிலையில் உள்ள நாங்கள் கூட்டுறவு வங்கியில் பல வருடங்களாக நகையை வைத்து பெற்ற கடனுக்கு வட்டி மட்டும் கட்டி வருகிறோம். நகையை மீட்க முடியவில்லை. எனவே எங்களது குடும்ப வறுமை மற்றும் பலவகையான தேவைக்காகவும் பட்டா, சிட்டா இன்றி நகையின் மீது வாங்கிய கடனை முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.