அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்

Update: 2021-02-21 17:40 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சக்கரக்கோட்டை ஊராட்சி பசும்பொன்நகர் பகுதியில் இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. எந்த பகுதியிலும் முறையான சாலை வசதி இல்லை.  பசும்பொன்நகர் பகுதி மக்கள் மட்டும் ஆண்டாண்டு காலமாக குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். தனியார் வாகனங்களை நம்பியே வாழ்ந்து வரும் மக்கள் மாதந்தோறும் குடிநீருக்காக தனியாக செலவிட வேண்டிய நிலை உள்ளது. குப்பைகள் தினமும் அகற்றப் படாததால் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கடும் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. தெருவிளக்குகள், குடிநீர், சாலை வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாதால் இந்த பகுதியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். மேலும், இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் குறைதீர்க்கும் பிரிவுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்