கல்வி உதவித்தொகை கிடைக்க 8-ம் வகுப்பு மாணவர்கள் 577 பேர் தேர்வு எழுதினர்
8-ம் வகுப்பு மாணவர்கள் 577 பேர் தேர்வு எழுதினர்
உடுமலை,
கல்வி உதவித்தொகை கிடைக்க 8-ம் வகுப்பு மாணவர்கள் 577 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
கல்வி உதவித்தொகை
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் 8-ம்வகுப்பு பாடத்தில் இருந்து 90 மதிப்பெண்களுக்கு மனத்திறன் தேர்வும், 90 மதிப்பெண்களுக்கு படிப்பறிவுத்தேர்வும் நடந்தது.
இந்த தேர்விற்காக உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஶ்ரீ கன்னிகாபரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசுமேல்நிலைப்பள்ளி, ஜே.எஸ்.ஆர்.மேல் நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரும், ஒரு துறை அலுவலரும் மற்றும் அறை கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக ரவிக்குமாரும், துறை அலுவலராக சின்ராசும் பணியாற்றினர்.
577 மாணவர்கள் எழுதினர்
உடுமலை கல்வி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு 632மாணவ, மாணவிகளுக்கு அனுமதிசீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் 577மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். ஒருவகுப்பறைக்கு 10 மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்து தேர்வு எழுதினர். 55பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை உடுமலை, மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, பள்ளி ஆய்வாளர் கலைமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.