முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்று வருகிறார்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு முடிந்ததும் கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி-குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார். அதன் பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வந்து மதிய உணவு அருந்துகிறார்.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் மதியம் 1.30 மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்படுகிறார். பெட்டவாத்தலை, குளித்தலை வழியாக கரூர் சென்றடைகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.