திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக இந்த மலைப்பாதை உள்ளது.
குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி பழுதாகி நிற்பதும், சில நேரம் கவிழ்ந்து விடுவதும் வாடிக்கையாகி விடுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
லாரி பழுதாகி நின்றது
இந்தநிலையில் தூத்துக்குடியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி காலை 10 மணி அளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது.
இதனால் மேற்கொண்டு் டிரைவரால் லாரியை இயக்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. லாரி, பஸ், வேன் போன்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பண்ணாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை தள்ளி ரோட்டோரம் நிறுத்தும் பணி நடந்தது. மதியம் 3 மணி அளவில் லாரி ரோட்டோரத்தில் தள்ளி நிறுத்தப்பட்டது.
அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.