ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆனைமலையாறுநல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-02-20 20:58 GMT
திருப்பூர்:-
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அணையை தூர்வார வேண்டும் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெட்டியில் போட்டனர். அந்த பெட்டியில் இருந்து மனுக்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டார்.
கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்தவர்களுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசிய விவரம் வருமாறு:-
மடத்துக்குளம் தொகுதி மலைவாழ் மக்கள் பிரதிநிதியான செல்வம்:-நாங்கள் மலைவாழ் புலையன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பட்டியலினத்தில் உள்ளோம். பழங்குடியினர் சான்று வழங்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை வழங்கப்படவில்லை. அதுபோல் 1,200 பேருக்கு வனஉரிமை பட்டா வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதுவரை வழங்கப்படவில்லை. காடம்பாறை பகுதிக்கு மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் எங்கள் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. ஆனால் எங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின்:-பட்டியலின சான்று வழங்கப்பட்டுள்ளதால் அரசின் பல சலுகைகள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பழங்குடியினர் சான்றை நானே வந்து வழங்குவேன். அதுபோல் வனஉரிமை சட்டத்தின்படி வன உரிமையும், தனிநபர் உரிமையும் பாதுகாக்கப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
மடத்துக்குளம் தொகுதி கரும்பு விவசாயி ஈஸ்வரன்:-
அமராவதி அணையில் 4 டி.எம்.சி. அளவு தண்ணீர் தேக்கி வைத்து கரூர் வரை பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் தற்போது பாசன பகுதியில் தொழிற்சாலைகள் பெருகி விட்டதால் தண்ணீர் தேவை அதிகரித்து விட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதுபோல் அமராவதி அணையில் வண்டல் மண் சகதி நிறைந்து காணப்படுகிறது. இதனால் 3 டி.எம்.சி. அளவு தண்ணீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. இதனால் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகிறது. 
எனவே அமராவதி அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வறட்சி காலத்தில் அணையை தூர்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. அங்கு எரிசாராயம் உற்பத்தி தொழிற்சாலையும் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு எரிசாராயம் உற்பத்தி செய்யப்படவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை 
மு.க.ஸ்டாலின்:-அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.5 கோடி வரை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டி இருப்பதாக விவசாயிகள் மனுக்கள் மூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். நிலுவைத்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சர்க்கரை ஆலை குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
உடுமலை தொகுதியை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஸ்வேதா:- தென்னை பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். முத்ரா வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தும் எனக்கு கடன் கிடைக்கவில்லை. வங்கிக்கடன் பெறுவதில் பல்வேறு சிக்கலை சந்தித்தேன். புதிய தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதில்லை. இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மு.க.ஸ்டாலின்:-தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய தொழில்முனைவோருக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டு தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யப்படும். கொரோனா காலத்தில் கூட வங்கிக்கடன் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் வழங்கி தொழில் முன்னேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.
காங்கேயம் தொகுதியை சேர்ந்த சிதம்பரம்:-மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களை இழந்து நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை மூலமாக மிரட்டி திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார்கள். சாலையோரம் புதைவடம் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் 
மு.க.ஸ்டாலின்:-விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் 13 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் கிணறு அமைக்க கூட முடியாத நிலை உள்ளது. விவசாயிகளிடம் கருத்து கேட்டு தி.மு.க. ஆட்சியில் கவனத்துடன் பரிசீலித்து தீர்வு காணப்படும்.
மடத்துக்குளம் தொகுதி விவசாயி நாச்சிமுத்து:- பி.ஏ.பி. பாசனத்தால் 3 மாவட்டங்கள் அதாவது 9 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் பயன்பெறுகிறார்கள். ஆனைமலையாறு-நல்லாறு தடுப்பணை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதன்காரணமாக முன்பு ஆண்டுக்கு 125 நாட்கள் பாசனவசதி பெற்ற நாங்கள் இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 35 நாட்களே பாசனம் பெறும் நிலை உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போவதை தடுக்க ஆனைமலையாறு-நல்லாறு தடுப்பணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காண்டூர் கால்வாய் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. நீர்மேலாண்மையை சரியாக பயன்படுத்தி குறைபாடுகளை களைய வேண்டும். கால்வாய் பகுதியில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் திருடுவதால் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயிகள் சிறப்பாக இருக்க முடியாது. விவசாய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும்.
மு.க.ஸ்டாலின்:-பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கட்ட வேண்டிய ஆனைமலையாறு-நல்லாறு தடுப்பணை திட்டம் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காண்டூர் கால்வாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் செய்திகள்